வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பீ.ஜையும்! சூன்யமும்!!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சுலைமான்(அலை) ஒரு நபி; அவர்களுக்கு இறைவன் மனித அறிவுக்கு எட்டாத சில அற்புதங்களைக் கொடுத்திருந்ததாக 21:81,82, 27:16-44, 34:12,13 ஆகிய வசனங்களில் கூறுகிறான். இவற்றைத் திரித்து அன்றைய மதகுருமார்கள் சுலைமான்(அலை) அவர்களை சூன்யக்காரன், சூனியம் செய்து மக்களை ஏமாற்றுகிறார். அதனால் நிராகரிப்பாளர் ஆகிறார் என்று கூறி மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முற்பட்டனர்.

அதற்குப் பதிலடியாகத்தான் அல்லாஹ் சுலைமான்(அலை) நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள்தான் நிராகரிக்கின்றனர். அவர்கள்தான் மனிதர்களுக்குச் சூன்யத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறி எச்சரிக்கிறான். இதிலிருந்து என்ன விளங்குகிறது. சூன்யக்கலை நிராகரிப்பாளர்களான ஷைத்தான்கள் கற்றுக் கொடுக்கும் காஃபிராக்கும் ஒரு தீய செயல் என்பது தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் ஜின், மனித இனத்தைச் சோதிப்பதற்காகக் குடி, விபசாரம், சூது போல் சூன்யத்தைப் படைத்துள்ளான் என்பதை விளங்க முடிகிறது. இதை அடுத்த பகுதி உறுதிப்படுத்துகிறது; அது வருமாறு :

“இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (கற்றுக் கொடுத்தார்கள்) ஆனால் அவர்கள் இருவரும் “”நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பாளர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காதவரை, எவருக்கும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் கணவனுக்கும், மனைவிக்குமிடையே பிரிவை உண்டாக்கும்(தீய) செயலைக் கற்றுக் கொண்டார்கள்; எனினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.”

இப்பகுதியைப் படித்து விளங்குகிறவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை ஏற்படுத்தும் சூன்யத்தை சோதனையாக அல்லாஹ்வே இந்த இரு மலக்குகளுக்கு இறக்கினான் என்பது “”வமா உன்சில அலல் மலக்கைனி பிபாபில ஹாரூத்தவ மாரூத்த” என்ற அரபு வாசகம் உறுதிப்படுத்துகிறது.

பீ.ஜை. சொல்வது போல் 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும் மீக்காயிலையும் குறிப்பிடுவதாக இருந்தால், “வமா உன்சில ” இறக்கப்பட்டதை என்று அல்லாஹ் குறிப்பிடுவானா? மேலும் “”அலல் மலக்கைனி” என்ற பதத்தை 2:98-ல் குறிப்பிடாமல் 2:102-ல் குறிப்பிட்டு மக்களை குழப்பத்தில் ஆக்குவானா? மேலும் 2:98-ல் “”வமலாயிகத்திஹி” என்று வானவர்களைக் குறிப்பிட்டு, அவர்களில் சிறப்புக்குரியவர்களாக ஜிப்ரீலையும், மீக்காயிலையும் தனித்தும் கூறியுள்ளான். இந்த நிலையில் 2:102 காணப்படும் “”அலல் மலக்கைனி” என்ற அரபி பதம் அடுத்து வரும் ஹாரூத், மாரூத்தைக் குறிப்பிடாது, 2:98-ல் இடம் பெற்றுள்ள ஜிப்ரீலையும், மீக்காயிலையுமே குறிக்கும் என்று சுய சிந்தனையற்ற அறிவீனர்கள் மட்டுமே விதண்டாவாதம் செய்ய முடியும்.

ஹாரூத்தும், மாரூத்தும் ஷைத்தான்களாக இருந்தால் அவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் செய்தி இறக்குவானா? என்ற சாதாரண சிந்தனையும் பீ.ஜைக்கு இல்லையா? அவர்கள் ஷைத்தான்களாக இருந்தால் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். சூன்யத்தைக் கற்று நீங்கள் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்!” என்று எச்சரித்து இருப்பார்களா? என்ற சாதாரண அறிவும் பீ.ஜைக்கு இல்லையா? ஜின் இனமும், மனித இனமும் மட்டுமே சோதனை வாழ்க்கைக்குரியவர்கள், மலக்குகள் சோதனைக்குரியவர்கள் அல்ல என்று 51:56 இறைவாக்குக் கூறுவதை அறியாதவரா பீ.ஜை? இந்த நிலையில் மலக்குகளையும் சோதனைக்கு உட்பட்டவர்களாக்கி, மலக்குகள் கெட்டவற்றைக் கற்றுக் கொடுப்பார்களா? என்று வினா தொடுப்பவர் அறிவாளியா? அறிவீனரா? சூன்யம் கெட்டது என்று அறிந்த நிலையில் அது வெறும் தந்திரவித்தை என்று பிதற்றும் பீ.ஜை. நேர்வழி நடப்பவரா? வழிகேடரா? சிந்தியுங்கள்!

2:102-ன் இறுதிப் பகுதி:
“”தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எவ்வித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். இதனை (சூன்யத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (2:102)

இந்த கடைசிப் பகுதியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். பீ.ஜை. சொல்வது போல், சூன்யம் வெறும் தந்திர வித்தை என்றால் அது பற்றி இந்த அளவு கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு முஸ்லிம் இந்தத் தந்திர வித்தையைக் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு (MAGIC SHOW) பிழைக்கிறார். அவற்றிலுள்ள தந்திரத்தை விளக்குகிறார். அதனால் அவர் காஃபிராகி விடுவாரா? 2:102 இறுதிப் பகுதி கூறும் கடும் தண்டனைக்கு ஆளாவாரா? பதில் என்ன? ஆம்! சூன்யக்கலை தந்திரவித்தை மட்டுமல்ல. முஸ்லிமான ஒருவனை காஃபிராக்கும் ஒரு மிகக் கொடுமையான பாவமான செயல். அதில் ஈடுபடுகிறவன், ஈடுபடப்பட 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்துத் தூண்டுகிறவன் ஒருக்காலும் முஃமினாக-உண்மை நம்பிக்கையாளனாக இருக்கவே முடியாது. இதுவே 2:102 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறும் உண்மை.

இதற்கு மேலும் அல்குர்ஆனில் சூன்யம் பற்றிக் கூறும் கீழ்க்கண்ட சுமார் 52 இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால் சூன்யம் வெறும் தந்திரவித்தை மட்டுமல்ல, எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்குகள் விளைவதாக அல்குர்ஆன் 113,114 அத்தியாயங்கள் கூறும் தீங்குகள் போல் சூன்யத்தினாலும் எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்கு ஏற்படச் செய்ய முடியும். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி சூன்யம் பலிக்காது. ஆயினும் அப்படிப்பட்ட சூன்யச் செயல்களில் ஈடுபடுகிறவன், ஈடுபடத் தூண்டுகிறவன் காஃபிராகிறான். மறுமையில் அவனுக்கு எவ்விதப் பாக்கியமும் கிடைக்காது. சூன்யக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே முடியாது. அவன் நாளை நரகில் எறியப்படுவான் என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

- அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக