சனி, 10 மார்ச், 2012

வெளிநாட்டு நிதி; பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ நிதி உதவி பெறமாட்டோம் என்று அறிஞர் பீஜே அவர்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பைலா வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அறிஞர் பீஜே, வெளிநாட்டு நிதி பெற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்று ஆறு அம்சங்களை பட்டியலிட்டுள்ளார்.
  1. மக்களுக்கும் ஜமாத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.
  2. மக்களுக்கு கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.
  3. கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஆடம்பர ஜமாஅத்தாக மாறிவிடும்.
  4. தாவா பணிகளை விட எப்படி வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.
  5. அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
  6. பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
என்று கூறியுள்ளார். படிக்க;http://onlinepj.com/unarvuweekly/velinattil_uthavi_peruvathu_thavara/

நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஆறு அம்சங்களில் ஒன்று கூட குர்'ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டதல்ல. இவரது கற்பனையில் உதித்தவையே. வெளிநாட்டு அரசிடமிருந்தோ, நிறுவனங்களிடமிருந்தோ பணம் பெறுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல எனும் போது, தானாக ஒரு தடைபோட்டுக் கொண்டதோடு, வெளிநாட்டு நிதி உதவி பெற்று பல்வேறு நலப்பணிகளை செய்துவரும் அமைப்புகளையும் அறிஞர்களையும் வெளிநாட்டு சல்லிக்காக மாரடிப்பவர்கள் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார் அறிஞர் பீஜே. வெளிநாட்டு நிதி பெறும் விசயத்தில் பீஜேயின் அன்றைய நிலை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா;

கேள்வி; சவூதியிலிருந்து உங்களுக்குப் பணம் வருகிறது என்று குராபிகள் கூறி வந்தனர்.அவர்களுக்குத்தான் பணம் வருகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நல்ல பணிகளுக்கு சவூதியிலிருந்து பணம் வந்தால் அதைப் பெறுவது தவறா?
-கே.எம்.ஏ.உமர், திசையன்விளை.

பதில்;நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்ன பதிலை நீங்கள் படித்தீர்கள். ஆனால் இன்று தான் மேற்கோள் காட்டிய குர்'ஆன் வசனத்திற்கு முரணாக வெளிநாட்டு நிதி பெற்றால் 'பின் விளைவுகள்' ஏற்படும் என்று தனது மனோஇச்சையை சட்டமாக்கிக் கொண்டு,மற்றவர்களையும் விமர்சிக்கிறார். கேட்டால் சொல்வார்; வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் அந்த நாட்டிற்கு ஏற்ப தாளம் போடுகிறார்கள் என்று. உண்மையில் அவ்வாறு ஏதேனும் தவறிழைத்தால் அந்த தவறை விமர்சிக்கலாம். தானும் சவூதி போன்ற நாடுகளில் பணம் பெற்று மற்றவர்களை விட சிறப்பான நலப்பணிகளை செய்து குறைகளற்ற கணக்கு வழக்குகளை கையாண்டு நன்மதிப்பை பெற பீஜே முயற்சிக்கலாம். வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் சில முறைகேடுகள் செய்கிறார்கள் எனவே நான் வாங்கமாட்டேன் என்றால், உள்நாட்டு வசூல் செய்பவர்களும் சில முறைகேடுகளை செய்கிறார்கள். அதற்காக உள்நாட்டு வசூலையும் பீஜே நிறுத்தி விடுவாரா? உள்நாட்டு மக்களிடம் வசூலித்து முறையாக கணக்கு வழக்குகளை நேர்மையாக கையாள்கிறேன் என்றும், தமிழகத்திலேயே கணக்கு வழக்குகளில் நேர்மையான ஜமாஅத் என்னுடையது தான் என்று பீஜே சொல்வது உண்மையானால் அதே நேர்மையை வெளிநாட்டு நிதியிலும் ஏன் கடைபிடிக்க முடியாது? சிலர் சில தவறுகளை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அது போன்று ஆகிவிடுவோம் என்று பீஜே நினைப்பது அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது. அன்றைக்கு அருள்மறை வசனத்தின் அடிப்படையில் பதிலளித்தவர் இன்று 'பாலிசி' பேசுகிறார் என்றால், பாலிசி என்ற ஒன்றை மூன்றாவது ஆதாரமாக பீஜே கொண்டிருக்கிறார் என்று சில சகோதரர்கள் சொல்வது உண்மையோ ஏன் எண்ணத்தோன்றுகிறது. அல்லாஹ் அவரையும் நம்மையும் பாதுகாப்பானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக