சனி, 22 அக்டோபர், 2011

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

 
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் "மஹ்ரம்" இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

"..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.." (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

"எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!" என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் "நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!" என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

"எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்." (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் "நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!" என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் "மஹ்ரம்" என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? என்று நபி[ஸல்] கேட்க,  நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!" எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் "நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்." (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, "ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!" எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

"இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?" என்றால், அனைவரும் "இல்லை!" என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக