சனி, 8 அக்டோபர், 2011

ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடி வைத்துக் கொண்டு குத்பா ஓதியுள்ளார்களா? என்ற கேள்விக்கு அறிஞர் பீஜே, அந்நஜாத்தில் அன்று அளித்துள்ள பதிலை படியுங்கள்; 
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடி வைத்துக் கொண்டு குத்பா ஓதியுள்ளார்களா? -அமீர்ஜான், மேலக்கொவரப்பட்டு

பதில்: ஆம்! கைத்தடியை ஊன்றிக் கொண்டு குத்பா ஓதியுள்ளனர்.
"நாங்கள் ஜும்ஆவுக்குச் சென்றோம். அப்பொது நபிஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கைத்தடியை ஊன்றியவர்களாக எழுந்து நின்று இறைவனைப் புகழ்ந்தார்கள் … …. …. என்ற ஹதீஸ் அபூதாவூத், பைஹகீ, அஹ்மத், ஆகிய நூல்களில் ஹகம் இப்னு ஹஸ்ன் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிக்கப்படுகின்றது.
1986 அக்டோபர், அந்நஜாத்

நன்றாக கவனியுங்கள். கேட்ட கேள்வி என்பது நபி[ஸல்] அவர்கள் கைத்தடியுடன் உரையாற்றியுள்ளார்களா? என்பதுதான். ஆனால் பீஜே, ஜூம்ஆவில் நபி[ஸல்] அவர்கள் கைத்தடியை ஊன்றிக்கொண்டு உரையாற்றியுள்ளார்கள் என்று பதிலளிக்கிறார். இதன் மூலம் ஜூம்ஆவில் உரையாற்றும் ஒருவர் கைத்தடி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பது  அன்றைக்கு அவரது பதிலாகும். பீஜேயின் இன்றைய பதில் என்ன?

''ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/jummavukku_kaithadi_avasiyama/என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பீஜே, மேற்கண்ட அதே ஹதீஸை எடுத்து வைக்கிறார். வைத்து விட்டு தனது வியாக்கியானத்தை பதிலாக தருகிறார்.

''இந்த செய்தியை [ஹதீஸை] தவறாக புரிந்து கொண்டதால் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர் என்கிறார். அதோடு, இந்த ஹதீஸில் கைத்தடியை  வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இல்லை. மாறாக கைத்தடியை ஊன்றுகோலாக கொண்டு நபி[ஸல்] அவர்கள் உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்று கோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாக பயன்படுத்துவதாகும்''' என்று கூறுகிறார் பீஜே. அதாவது நபி[ஸல்]அவர்கள் கைத்தடியை தனது பலவீனத்தின் காரணமாக ஊன்றுகோலாகவே  பயன்படுத்தியுள்ளனர் என்பது பீஜேயின் கருத்தாகும்.

நன்றாக கவனிக்கவேண்டும். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'ஊன்றுகோலாக' என்ற வாசகம் அன்றைக்கு பீஜெயிக்கு தெரியவில்லையா? தெரிந்திருந்தது. அதனால்தான் ''ஆம்! கைத்தடியை ஊன்றிக் கொண்டு குத்பா ஓதியுள்ளனர்'' என்று சொன்னார். இன்றைக்கு சொல்வது போல், பலவீனத்தின் காரணமாக ஊன்றுகோலாக நபியவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற வியாக்கியானத்தை அன்று அவர் சொல்லவில்லை. இதன் மூலம் ஜூம்ஆவில் கைத்தடி வைத்துக் கொள்வதை அன்று சரிகண்டிருக்கிறார். இன்று மறுக்கிறார்.

மேலும் பீஜேயின் கூற்றுப்படி, கைத்தடியை நபி[ஸல்] அவர்கள் பலவீனத்தின் காரணமாக வைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதாக இருந்தால், நபியவர்கள் கைத்தடியின்றி நடக்க முடியாத அளவுக்கு பலவீனராக இருந்தார்கள் என்று பீஜே கூறவருகிறாரா?  நடப்பதற்கு கைத்தடி பயன்படுத்துபவர் தான் ஒரு இடத்தில் நிற்பதற்கும் பயன்படுத்துவார். அப்படியானால் நபி[ஸல்]அவர்கள் கைத்தடி துணையுடன் தான் எப்போதும் நடந்தார்கள் என்று பீஜே காட்டத் தயாரா?

அடுத்து, ''கைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் ஜூம்ஆவின் ஒழுங்கு முறையில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபி[ஸல்] அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை'' என்று கூறி, எனவே கைத்தடி அவசியமில்லை என்று பீஜே கூறுகிறார்.

நாம் கேட்கிறோம் ஜூம்ஆ உரை மிம்பர் மீதுதான் நிகழ்த்த வேண்டும் என்று எங்கேனும் நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டுள்ளார்களா? இல்லை. ஏனெனில் மிம்பர் இல்லாத காலகட்டத்தில் மரத்தில் சாய்ந்தவண்ணம் தரையில் நின்று நபி[ஸல்] அவர்கள் உரையாற்றியுள்ளார்கள் என்று இதே பீஜே ஒப்புக்கொள்கிறார். மேலும் மிம்பர் தயாரிக்கப்பட்டது பீஜேயின் கூற்றுப்படி, நபி[ஸல்]அவர்கள் பலவீனத்தின் காரணத்தினால் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றுவதை தவிர்க்கவே அமரும் வகையில் மிம்பர் தயாரிக்கப்பட்டது. எனவே மிம்பர் என்பது நபி[ஸல்] அவர்கள் பலவீனமாக இருந்ததால் உருவாக்கப்பட்டது. எனவே மிம்பரை பயன்படுத்தி  ஜூம்ஆ உரை நிகழ்த்துவது தவறு என்று பீஜே அறிவிக்கத் தயாரா? அல்லது மிம்பரை நபி[ஸல்] அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் நாமும் பயன்படுத்துகிறோம் என்று பீஜே கூறுவரானால், இது கைத்தடிக்கும் பொருந்துமே!

எனவே தனது சுய வியாக்கியானத்தை திணிப்பதற்காக, நோயுற்ற வேளை நீங்கலாக, மற்ற நேரங்களில் எல்லாம் திடகாத்திரமாக இருந்த நபி[ஸல்] அவர்களை கைத்தடி உதவியுடன் நிற்கும் ஒரு பலவீனராக பீஜே காட்ட நினைக்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக!

குறிப்பு; இதை படிக்கும் பீஜேயின் அபிமானிகள், அன்றும் அந்த ஹதீஸ் இருக்கிறது என்றார் பீஜே. இன்றும் அந்த ஹதீஸ் இருக்கிறது என்கிறார். இதில் எங்கே முரண்பாடுள்ளது என்று குதிப்பார்கள். நாம் கூறவருவது, பீஜே இந்த ஹதீஸை இன்று மறுத்து விட்டார் என்பதல்ல. மாறாக, அன்று இந்த ஹதீஸை வைத்து கைத்தடியை சரி கண்டவர், இன்று அதே ஹதீஸை வைத்து கைத்தடியை மறுக்கிறார்; நபி[ஸல்] அவர்களை பலவீனராக கட்டுகிறார் என்பதே.

அல்லாஹ்வே மிக அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக